Bluepadராட்சசி - நமது கல்வித்தரத்தைப் பற்றி பேசும் திரைப்படம்.
Bluepad

ராட்சசி - நமது கல்வித்தரத்தைப் பற்றி பேசும் திரைப்படம்.

V
Venkatesh Ramanan
2nd Jul, 2020

Share

வெகு சிலப்படங்களே சமூகத்தின் மாற்றத்தை விரும்பும் முற்போக்கு சிந்தனையுடன் அமையும். ஆனால் அப்படி அமையும் சிலப்படங்களிலும் கதாபாத்திரங்களின் தேர்வு படத்தை தலைக் குப்புற சாய்த்து விடும். மிக நல்ல சமூகநலனுடன் கூடிய திரைக்கதை அதற்க்கு ஜோதிகா போன்ற நடிகை நடிக்க சம்மதித்து , சிறப்பாகவே நடித்தும் கொடுத்தால் அதுவே “ ராட்சசி “ .
கீதா ராணி என்னும் அரசாங்க பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் ஜோதிகா. ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்திற்கு விருப்பப் பட்டு , அதே பள்ளிதான் வேண்டும் என்று பிடிவாதமாய் கேட்டு தலைமை ஆசிரியராக வருகிறார் . ஆனால் விருப்பப் பட்டு வந்த பள்ளிக்கூடத்திலோ எதுவுமே சரியாக இல்லை.

தலைமை ஆசிரியரை மதியாத ஆசிரியர்கள் , அவர் உத்தரவுகளை சிறிதும் லட்சியம் செய்யாமல் இருக்கிறார்கள். அரசாங்க ஆசிரியர் பணியின் மகத்துவம் மற்றும் தன்மை அறியாமல் பொறுப்பற்று திரியும் ஆசிரியர்களை , தலைமை ஆசிரியர் எப்படி சீர் செய்து மாணவர்களையும் நல்வழிப் படுத்துகிறார் என்பதே இப்படத்தின் கதை.

தலைமை ஆசிரியையின் துரித நடவடிக்கைகளால் ஒரு தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கையும் பாதிக்க படுகின்றது . அந்த பள்ளியின் முதலாளியும் அவரை வீழ்த்த நினைக்கின்றார் . வழக்கமான பழிவாங்குதல் , மாணவ துன்புறுத்தல் அல்லாத பொறுப்பான எதிரி பாத்திரம் அதை அருமையாகவே உள்வாங்கி செய்துள்ளார் ஹரிஷ் பேராடி .

முழுப்படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார் ஜோதிகா , நடை , உடை , வசனம் , நேர்த்தி என மிகச்சிறப்பாகவே நடித்து ராட்சசியாகவே மாறியுள்ளார். ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சிபெறாதவர்களை பத்தாம் வகுப்பிற்கு அனுப்புவது , அதன் விளைவுகளை துணிச்சலாக எதிர் கொள்வது பொறுப்பற்ற ஆசிரியரை விளையாட்டுப்போட்டிக்கு தலைமை ஏற்க வைப்பது, தந்தை இறந்த அன்றே பணிக்கு வந்து உருகி அழுவது , வயதுக்கு மீறி பேசும் சிறுவனை சிரித்தே கடப்பது என மிக வலுவானப் பாத்திரம். ஜோவின் சிறந்த படம் என்றே கூறிவிடலாம் சில நிமிடங்கள் முன்னாள் ராணுவ அதிகாரி தோற்றத்தில் வந்தாலும் அசத்தல்!

பூர்ணிமா பாக்யராஜ் அவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர் பாத்திரம் , நிறைவாகவே செய்துள்ளார் ஆனால் அவரை இன்னும் கூட நன்றாகவே பயன்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அனைவருமே நன்றாக நடித்துள்ளனர் , குழந்தை நட்சத்திரங்கள் உட்பட. அந்தப் பள்ளிக்கூடமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிட்டது. ஒரு சில இடங்களில் நம்மை நம்மழலைக் காலத்திற்கே கொண்டு செல்கிறது.பாடங்களை போதிக்கும் முறை , திறன் மேம்பாடு , விளையாட்டில் ஈடுபடுத்துவது , கல்விக்கொள்கைகள் போன்ற பல நியாமான விஷயத்தை அருமையாக சொல்ல முற்பட்ட வகையில் இயக்குனர் கெளதம் ராஜை மனதார பாராட்டலாம்.

அப்பா , சாட்டை போன்றப் படங்களை சிறிது நினைவூட்டினாலும் இப்படமும் ஒரு மிகச் சிறப்பான படைப்பே. அறிவுரைகள் சற்று அதிகம் அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இத்தகைய படங்கள் நம் ஊரில் ஓடுவதே இல்லை. திரையிட்டவர்களுக்கு , வெளியிட்டவர்களுக்கு இது ஒரு லாபகரமான படைப்பாய் தெரியவில்லை. இது போன்ற படங்களுக்கு ஆதரவே அளிக்காத நாம் தான் நாமே தான் “ எப்போ தான் நம்ப டமில் மூவிஸ் கிளாஸ் ஆ மாறும் “ “ மலையாளம் மூவிஸ் ஆர் தி பெஸ்ட் ல “ என்று பந்தா விடுவோம்.

நாமே ஆதரவளிக்காமல் போனால் இத்தகைய நல்ல விதமான கருத்துகளை கூற முற்படும் படங்கள் மேலும் எப்படி வெளிவரும்?

7 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad