எழுத்துகள் சிதறி
விழுந்தன..
எடுத்துக் கோர்த்து
உடுத்த முடியாமல்
அவனின்
அர்த்தங்கள் அழுகின்றன..
இனி
வலிகளைக் கூற
வழிமுறை ஏது?
கண்ணீர் அர்த்தம்
காண்பது எப்படி..?
எங்களைச் சுமக்க
எழுத்துகள் பற்றவில்லை...
அவைதான்
உடைந்து விழுந்து
சிதறிக் கிடக்கின்றனவே
என
சிந்தித்துச் சிந்துகின்றன அவன்
சொல்ல வந்த அர்த்தங்கள்
வலியின் ஆழம்
வர்ணிக்க முடியாமல்
வார்த்தைகள் சிதறி
எழுத்துகள் தெறித்ததை
வேடிக்கை பார்க்க
வந்தவர் எவரும்
பொறுக்கிக் கூடத் தரவில்லை...
அர்த்தத்தை மட்டும்
இறுக்கிப் பிடிக்க
இரண்டு கரமும்
இணைந்து நிற்கின்றன
அவனுக்கு...
தண்ணீர் கூட
குடிக்காத வாய்கள்...
எழுத்துகளைக் கோர்த்து
எப்படி பேசும்...?
கண்ணீர் ஒன்றே
பேசுகிறது
காணும் கண்களுக்கு
புரிகிறதா...
அதன் அர்த்தம்...
வார்த்தையின்றி
வருந்துவோருக்கு
எழுத்துகளை கோர்த்து
இயன்றவரை கொடுத்திடு...!
அர்த்தமுள்ள வலிகளுக்கு
ஆறுதல் வழங்கிடு..!
#இளந்தமிழ்இளவரசி