Bluepadராகுல் டிராவிட் ஒரு சிறந்த கேப்டனும் கூட - மனம் திறக்கிறார் கௌதம் கம்பீர்.
Bluepad

ராகுல் டிராவிட் ஒரு சிறந்த கேப்டனும் கூட - மனம் திறக்கிறார் கௌதம் கம்பீர்.

A
Arvind Kumar
29th Jun, 2020

Share

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சிறந்த கேப்டன்கள் என்றால் அனைவரும் கபில்தேவ் , அசாருதீன், கங்குலி, தோனி என்றுதான் கூறுவார்கள். இப்போது கங்குலி , தோனி , விராட் கோலி என்பது தான் சமீபத்திய பட்டியல். ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் கேப்டனாக இருந்துள்ளார். அதிலும் டெஸ்ட் மேட்ச் , ஒன் டே என்று இரு மாறுபட்ட தொடர்களிலும் சிறப்பாக நிர்வகித்து வந்தார்.




ராகுல் ட்ராவிட்டின் திறமையை அனைவருமே மிக குறைவாகதான் மதிப்பிட்டிருக்கிறார்கள்... இப்போதும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ராகுல் டிராவிடை ஒரு சிறந்த டெஸ்ட் பிளேயர் என்று வர்ணிக்கும் அனைவரும் அவர் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து இருக்கிறார் என்பதை எளிதாக மறந்துவிடுகிறார்கள்.

இந்த ஆதங்கத்தை தான் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் வெளிப்படுத்தியிருக்கிறார். " ராகுல் டிராவிட் ஒரு மிகச்சிறந்த வீரர், சிறந்த கேப்டனும் கூட நான் பல ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் நான் முதலில் டெஸ்ட் போட்டி விளையாடியது ராகுல் டிராவிட் தலைமையின் கீழ்தான்...

ராகுல் டிராவிடின் தலைமையில் இந்தியா, இங்கிலாந்து சென்று தொடர்களை வென்றது. அதுபோல் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா என்று அவர்களின் சொந்த மண்ணிலேயே பல சாதனைகள் புரிந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் ஒருநாள் போட்டியில் தலைமை வகிக்கும் போது தொடர்ந்து 16 போட்டிகளில் வென்ற இந்திய அணி என்ற சாதனையை படைத்தது . இன்று கங்குலி, தோனியை தலையில் தூக்கி வைத்து பாராட்டும் அனைவரும் எளிதாக ராகுல் டிராவிடை மறந்து விடுகிறார்கள் " என்று வருந்துகிறார்.

கௌதம் கம்பிரின் இந்த ஆதங்கத்தை பதிலளிக்கும் கிரிக்கெட் வல்லுனர்கள், ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையில் மிக மோசமான ஒரு பர்பாமென்ஸ் செய்துவிட்டது, இதனால் ராகுல் டிராவிட் ஏற்கனவே செய்த சாதனைகள் எல்லாம் இருட்டடிக்க பட்டு விட்டது என்று கூறி வருகிறார்கள்.

எது எப்படியோ ராகுல் டிராவிட் ஒரு நிகரற்ற வீரர்.

அவர் கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் துணிச்சலாக களமிறங்கி விளையாடக் கூடியவர் . ஓபனர் , மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர் என்று எல்லா வேலையும் மிக கச்சிதமாக செய்பவர். உலக கோப்பையை பொருத்தவரை ராகுல் ட்ராவிட்டிற்கு துரதிஷ்டம் வீசி இருக்கலாமே ஒழிய அவரும் தனது திறமைகளை மிக கச்சிதமாக கையாண்டார் என்றே கூறலாம்.

ராகுல் டிராவிட், அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை தாமாக முன்வந்து பூர்த்தி செய்தார். கங்குலி ஒரு அணியில் 7 பேட்ஸ்மேன் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தீர்க்கமாக நம்பினார். ஒரு புதிய விக்கெட் கீப்பர் அணியில் சேர்த்தால் ஒரு பேட்ஸ்மென் இடம் காலியாகும் என்று தயங்கினார்.அவர் ராகுல் டிராவிட்டை கேட்டபோது அவர் மறுக்காமல் தான் விக்கெட் கீப்பிங் பார்ப்பதாக ஒப்புக்கொண்டார். இந்திய அணியில் ஒரு அதிமுக்கியமான மாற்றத்திற்கு வழி வகுத்தவர் கங்குலி என்றால் அதற்கு முழுமனதாக வழிமொழிந்தது ராகுல் டிராவிட் என்று கூட கூறலாம்.

இதனால் தான் பிற்காலத்தில் தோனி போன்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணியில் நிலையாக இடம் பிடிக்க முடிந்தது. ஆரம்பத்தில் ராகுல் டிராவிட் ஒன்னும் ஆகா ஓகோ என்று விக்கெட் கீப்பிங் செய்துவிடவில்லை. செய்தித்தாள்கள் அவரை ஆரம்பத்தில் வாட்டி வதைத்தன. ஆனால் பின்னாளில் தாவிப் பாய்ந்து பிடிப்பது என்று விக்கெட் கீப்பிங் அற்புதமாக செய்யத் துவங்கினார் ராகுல் டிராவிட். இன்றளவும் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் அவர்தான்.

ஸ்லிப்பில் அவரைப் போன்று கேச்களை கப்பென்று பிடிக்க இன்னொரு வீரர் பிறந்து தான் வர வேண்டும். அவரின் துரதிஷ்டம் என்பது என்னவென்றால் சச்சின், ஷேவாக் , கங்குலி , லட்சுமண் போன்ற அனைவரும் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே அவரும் விளையாடியது தான் என்று கூறலாம். . .

ஏனென்றால் இவர்களின் அதி பிரகாசமான புகழ் ஒளி ராகுல் டிராவிடின் நிகரற்ற சாதனைகளை சற்று நமது கண்களில் இருந்து மறைத்து விட்டது என்று கூட கூறலாம்.




0 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad