Bluepadபென்குயின் - ஒரு தாயின் போராட்டம்…!
Bluepad

பென்குயின் - ஒரு தாயின் போராட்டம்…!

V
Venkatesh Ramanan
27th Jun, 2020

Share

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமேசான் பிரைம் என்னும் ஓ. டி. டி. தளத்தில் இந்த படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளிவரும் படம் என்பதால் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் கூட வரவேற்பை பெற்றது.





சென்ற 19ஆம் தேதி ஓ.டீ.டீ தளத்தில் வெளியான இந்த படத்தை பலரும் விருப்பத்துடன் பார்த்து வந்தனர். இந்தப் படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. கீர்த்தி சுரேஷை தவிர இந்த படத்தில் மிகப்பெரிய அம்சம் எதுவுமே இல்லை என்று ஒரு சாராரும், கீர்த்தி சுரேஷ் இன்னும் நன்றாகவே நடித்திருக்கலாம் என்று ஒரு சாராரும், படம் நன்றாகத்தான் இருக்கிறது ஏன் கிண்டல் செய்கிறார்கள் என்றே புரியவில்லை என்று ஒரு சாராரும் கூறிவருகிறார்கள்.

இந்த படம் குழந்தையை தொலைத்து விட்டு தவிக்கும் ஒரு தாயின் பரிதவிப்பு பற்றிக் கூறும் கதை. குழந்தையின் தாயாக கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார். இவரின் நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது இந்தப் படம்தான்.கொடுத்த வேலையை மிக நன்றாகவே செய்திருக்கிறார். பூச்சிகளைக் கண்டு பயப்படுவது , தைரியமாக பேசுவது , காணாமல் போன குழந்தை கிடைத்தவுடன் கண்களாலேயே அந்த காட்சியில் அருமையாக பேசுகிறார்.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல, அதாவது மகாநதி படத்தை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் இன்னும் அவர் சிறப்பாக நடித்திருக்க வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் இந்த படத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தான் அவர் செய்திருக்கிறார்.

ஒரு தாயாக அவர் படும் துயரம், தவிப்பு , கண்டிப்பு என எல்லாவற்றிலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய குறை என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் அவர்களின் கதாபாத்திரத்தை தவிர மீதம் உள்ள எந்த கதாபாத்திரமும் அந்த அளவிற்கு நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை இதன் காரணமாக திரைக்கதை சற்று தடுமாறுகிறது.

அஜய் ஆக நடித்த சிறுவன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் அவனுக்கு படத்தின் இரண்டாம் பாதியில் தான் வேலை அதிகம்.

விஜய் டிவி தாயுமானவன் புகழ் நடிகர் இந்த படத்தில் ஒரு முக்கியமான மருத்துவர் வேடத்தை ஏற்று செய்திருக்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். இருந்தாலும் அவரின் கதாபாத்திரம் மிகக் குழப்பமாக சித்தரிக்கப்பட்டு விட்டது.அவர்களைத் தவிர கீர்த்தி சுரேஷ் முன்னாள் கணவர் இந்நாள் கணவர் என இருவரும் அவ்வப்போது வந்து போகிறார்கள். மிகப்பெரிய வேலை என்று எதுவும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.கீர்த்தி சுரேஷின் தோழிகளுக்கும் அதே நிலைமைதான் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர மிகப்பெரிய வேலை என்று அவர்களுக்கும் எதுவுமில்லை.

இந்தப் படத்தின் கேமரா கோணங்கள் , போட்டோகிராபி, காட்சியை நகர்த்தி இருக்கும் விதம் மிக அருமையாக இருக்கிறது. குறிப்பாக அந்த கொலையை காட்சிப்படுத்திய விதம் மிக அருமையாக இருந்தது. புதிய இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மிக அருமையாக இயக்கி இருக்கிறார்.

படத்தை பலர் சரிவர புரிந்து கொள்ளாமலேயே வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்து வருகிறார்கள். அதுவும் படம் வந்தவுடன் சமூக வலைத்தளங்களில் பலத்தவாறு இயக்கத்தை கிண்டல் செய்து வந்தார்கள். ஆனால் அதில் குறிப்பிட்ட படி இந்த படத்தில் எதுவுமே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

படத்தில் குறைகளே இல்லை என்று கூறமுடியாது. ஆனால் அந்த குறைகளை சமூக வலைத்தளத்தில் மிக மிகைப்படுத்தி கூறுகிறார்கள். லாஜிக் குறைகளை இந்த படத்தில் மிக அதிகமாக சுட்டிக்காட்டினாலும், நமது தமிழ் சினிமாவில் எந்த படத்தில்தான் லாஜிக் இருக்கிறது. அதே போல மர்மமான படங்களில் லாஜிக் என்று ஒன்று கூட இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இது ஒரு அருமையான முயற்சி. அதுவும் நம் இல்லங்களில் உட்கார்ந்து பார்க்கும்போது இந்த படம் மிக மிக நன்றாகத் தான் இருக்கிறது. கடைசி அரைமணி நேரம் கதையின் போக்கை சற்று மாற்றி விட்டார்கள். அதுவரை மிக அருமையாக எடுக்கப்பட்டதாக தான் தோன்றுகிறது.

அதுவும் கடைசியில் அந்த குழந்தை தாயை பென்னிகுயின் ஆக உருவகப்படுத்தி வைத்திருக்கிறது மிக அருமையாக இருந்தது. ஆனால் இந்த காட்சிகள் பலரால் ரசிக்கப்பட வில்லை. உண்மையை சொல்லப்போனால் இது ஒரு மிக நல்ல முயற்சி தான்ன் , மிக அருமையான ஒரு கையாடல்.


12 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad