Bluepad | Bluepad
Bluepad
ஜெயம் ரவி தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து 17 வருடங்கள் ஆகிவிட்டது!!
V
Venkatesh Ramanan
24th Jun, 2020

Share


ஜெயம் ரவி  தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து 17 வருடங்கள் ஆகிவிட்டது!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திறமையானவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் ஜெயம்ரவி மிகவும் வித்தியாசமான நடிகர் என்றே கூறலாம். அவர் அறிமுகமான ஜெயம் படத்தில் நல்ல பெயரைப் பெற்றிருந்தாலும் " ஆமாம் ... அண்ணன் டைரக்டர் அப்பா எடிட்டர் எல்லாம் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திடுறாங்க பா " என்று அவர் காதுபடவே பலர் கேலி பேசினார்கள்.

ஆனால் அந்த விமர்சனங்கள் அவர் மனதை சற்று பாதித்தாலும் நாள்பட நாள்பட தனது நடிப்பு திறமையை மிக அழகாக மெருகேற்றி நடிப்பில் பல உச்சம் பெற்ற நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பது காட்டிலும் அவர் அண்ணன் ராஜா படத்தில் தான் நன்றாக நடிக்கிறார் என்று கூட அவர் மீது விமர்சனங்கள் வந்தது. அவர் அண்ணன் ராஜாவையும் ரீமேக் ராஜா என்று பயங்கரமாக கிண்டல் செய்து வந்தார்கள்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனதில் உறுதியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் முன்னேறிக் கொண்டே வந்தார் ரவி. அவரது அண்ணன் இயக்கத்தில் தில்லாலங்கடி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போன்ற பல படங்கள் நடித்து வந்தாலும் அவரது நடிப்பை முற்றிலுமாக மாற்றி அமைத்தது "பேராண்மை" என்னும் படம் தான்.

இந்த படத்தில் மலை கிராமத்தை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியாக மிக அருமையாக நடித்திருப்பார். அந்த பாத்திரத்தை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார். "துருவன்" கதாபாத்திரம்தான் அவருக்கு அடுத்தடுத்து பல நல்ல கதாபாத்திரங்கள் அமைய வழிவகுத்தது.

அன்று எஸ்பி ஜனநாதன் மாற்றிய பாதையில் பயணிக்கத் தொடங்கிய ஜெயம்ரவி இன்றுவரை அதை மிக சிறப்பாக செய்து வருகிறார் என்றே கூறலாம். தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அடையாளமாக மாறியே விட்டார் ஜெயம் ரவி. இயக்குனர் ராஜாவும் இந்தப் படம் மூலம் பலரின் பாராட்டுக்களை சம்பாதித்தார்.

அண்ணன்-தம்பி கூட்டணியில் அமைந்த அனைத்து படங்களைவிட இந்த படம் அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது. இந்த தனி ஒருவன் படத்திற்கு பிறகு அரவிந்த்சாமியின் மார்க்கெட்டும் எக்கச்சக்கமாக எகிறியது என்பது வேறு விஷயம்.

மீண்டும் அரவிந்த்சாமியும், ஜெயம் ரவி இணைந்து நடித்த போகன் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் அந்த தனிஒருவன் பிராண்டை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது பார்ப்பவர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

அதனால்தான் அவர் எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு தகுந்தது போல செயல்பட முடியும் என்றும் நம்புகிறார்.சமீபத்தில் அவர் நடித்த அடங்கமறு, கோமாளி போன்ற படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

ஆரம்ப காலத்தில் வெறும் லவ்வர் பாய் ஆகவே நடித்து வந்த ஜெயம் ரவி காலம் செல்ல செல்ல தன்னை ஒரு சிறந்த பன்முகத்தன்மை கொண்ட நடிகராக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் இப்போது புகுந்து விளையாடுகிறார்.

முன்புபோல கதை கேட்டோம் நடித்தோம் என்று இல்லாமல் தற்போது ஆற அமர ஆராய்ந்து , அவருக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து மிக அருமையாக செயல்படுகிறார்.

வெற்றியின் போதை தனது தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்ளும் வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். என்றுமே தலைகனதுடன் அவர் பேட்டி அளித்தோ அல்லது டுவீட் செய்து இதுவரை பார்த்ததில்லை. இனியும் அப்படி தான் இருப்பார் என நம்புவோம். ஒரு கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுக்க என்றுமே தயங்கியதில்லை.

ஒருவேளை அவர் அப்படி மெனக்கெட்டு நடித்த படங்களும் சரியாக ஓட வில்லை என்றாலும் அவர் பெரிதாக கவலைப்படுவதில்லை , மனது சோர்வு அடைவதில்லை அடுத்த வேலையை பார்க்க சென்று விடுகிறார் .

இந்த பக்குவத்தையும் அவர் மிக நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

10 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad