Bluepadசமூக விலக்கு
Bluepad

சமூக விலக்கு

முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
13th Jun, 2020

Share

கோடை விடுமுறையில் குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம் போல ஊர் முழுக்க வெறிச்சோடிக் கிடந்தது.. கோடீஸ்வரன்களையே ஆட்டம் காண வைத்த கொரோனா அன்றாடங்காய்ச்சிகளை சும்மா விட்டு வைக்குமா?
அந்தக் குடிசை வீட்டின் தென்னங்கிடுகுகளைத் தாண்டி அடுப்புப் புகை வெளியே கசிந்து கொண்டிருந்தது. உள்ளே விறகு அடுப்பை எரிய வைக்க ஊதாங்குழல் தன்னுயிர்க்காற்றை அடிவயிற்றிலிருந்து அதிவேகமாய்த் தள்ளி ஊதிக் கொண்டிருந்தாள் வசந்தி. பக்கத்திலிருந்த மண்ணெண்ணெய் கேனில் அடியில் ஒட்டிக்கொண்டிருந்த கடைசி மூடியையும் வடித்து ஊற்றி நெருப்பை மூட்டினாள். எண்ணையை விழுங்கிக் கொண்ட தீ கொஞ்ச நேரத்தில் அணைந்து போய் மீண்டும் புகையத் தொடங்கியது. அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. அதைக்காட்டிலும் உஷ்ணமாய் அவள் மனது கொதித்துக் கொண்டிருந்தது..
வசந்தியின் கணவன் குமார் சுவரின் மூலையில் கூட்டுப் புழுவைப்போல் சுருண்டு படுத்துக் கிடந்தான். நரைத்துப் போய் இருந்த அவனது தாடியும் மீசையும் அவனது நாற்பது வயதை இன்னும் பத்து வயது கூட்டிக் காண்பித்தது.ஊரடங்கிற்கு முன்பு தினமும் அவனுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைக்கிறதோ இல்லையோ சாயந்தரம் ஆனால் பச்சைக் கடைக்குப் போகாமல் இருக்க மாட்டான்.. ஒருநாள் குடிக்காவிட்டால் கூட கை கால் உதறல் எடுத்து விடும். சித்தாள் வேலைக்குப் போகும் வசந்தியின் கூலிக்காசையும் பல நேரங்களில் குடிப்பதற்குப் பிடுங்கிக் கொள்வான். இப்போது நாற்பது நாளுக்கும் மேலாய் பார்த்துவந்த வேலையுமில்லை.. கரோனா ஊரடங்கில் பிராந்தி்க் கடைகளையும் மூடி விட்டதால் ரேஷன் கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாயையும் வசந்தியிடம் இருந்து பறித்துக் கொண்டு நடு ராத்திரியில் பக்கத்து ஊருக்குப் போய் பிளாக்கில் வாங்கி வந்து குடித்தான். அதுவும் நாலு நாளில் தீர்ந்து போக இரவு முழுக்க தூக்கம் வராமல் கை கால் நடுக்கத்தோடு பைத்தியம் பிடித்தவன் போல் திடீர் திடீர் என்று கத்திக் கொண்டிருந்தான்.. மண்டைக்குள் மாவரைக்கும் சத்தம் கேட்பதாகவும் அடிவயிறில் யாரோ ஆணியறைவது போலிருப்பதாகவும் குமட்டிக் கொண்டு வருவதாகவும் ஏதேதோ உருவம் தெரிவதாகவும் நிமிஷத்துக்கு நிமிஷம் மாற்றி மாற்றி உளறியும் குழறியும் புலம்பிக் கொண்டிருந்தான். குடிநோயாளியாகிப்போன புருஷனின் நிலையை நினைக்க நினைக்க ஒரு பக்கம் பாவமாகவும் ஒரு பக்கம் கோபமாகவும் வந்தது வசந்திக்கு..
உள்ளே தொட்டிலில் பசி பொறுக்காமல் அலறிக் கொண்டிருந்த ஆறு மாத கைக்குழந்தையான தன் தம்பியைத் தூங்க வைக்கத் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தாள் எப்பொழுது வேண்டுமானாலும் பெரிய மனுஷியாகிவிடும் மூத்தவள். இரண்டாம் வகுப்பு படிக்கும் இளையவள் வீட்டு வாசலில் மண்சோறாக்கி விளையாடிக் கொண்டிருந்தாள்.
'அட..யார் யாரோ ஆளுங்க வீடுவீடாக வந்து கரோனா அறிகுறி இருக்கானு கேட்குறாங்களே.. இப்பிடி குடி வெறில பித்துப்பிடிச்சு அலையுறவங்கள என்னவாச்சும் செஞ்சு சொகப்படுத்துறாங்களா? ம்.. எவன் கொடலு வெந்து செத்தா என்ன? எவ குடி முழுகிப்போனா என்ன? மனுச உசிரு அவ்வளவுக்கு மலிசாப்போச்சுல..'
ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த அவளது நினைவை தொட்டிலில் வீறிட்டு அழுத பிள்ளையின் அழுகை கலைத்துப் போட்டது.. வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்கிப் பால் கொடுக்க மார்போடு அணைத்தாள். சற்று நேரத்திலேயே தாய்ப்பால் கிடைக்காமல் அலறியது குழந்தை. தாய்க்கு தாய்ப்பால் வற்றிப் போய்விட்டது என்று பசியை அடக்க அந.த பச்சைக் குழந்தைக்கு தெரியுமா என்ன?! கரோனாவைவிட கொடூரமானது பசியில் பரிதவிக்கும் குழந்தையின் அழுகையைச் சமாதானப்படுத்துவது.. தாயும் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே.. பசியையும் வலியையும் பங்கு போட்டுக்கொள்ள முடியாதே..
உள்ளே எட்டிப்பார்த்தாள்.. மூலையில் முடங்கிக் கிடந்த புருஷனைக் காணவில்லை. குழந்தையின் அழுகை தொந்தரவாக இருக்கிறது என்று எழுந்து போய் இருப்பான். ஆம்பளைன்னா அப்படித்தானே.. கோபமோ கடமையோ சுலபமா ஆம்பளையால தப்பிச்சுப் போய்விட முடியுது.
நேற்று இலவசமா உதவி பண்றாங்கன்னு கேள்விப்பட்டு நாலு தெரு தள்ளிப்போய் அரை நாள் காத்துக் கிடந்து பால் பவுடருக்கும் அஞ்சுகிலோ அரிசிக்கும் தன் மானத்தை அடமானம் வச்சு ஒரே பைய ஏழெட்டு பேர் கிட்ட மாத்தி மாத்தி வாங்குற மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுத்து, வருமானமும் பிடிமானமும் இல்லாமல் புருஷன் புள்ளைகளுக்காக அவமானத்தை சகிச்சுகிட்டு வாங்கி வந்த துணிப்பை ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்குப் பால் கலப்பதற்கு எழுந்து பையை எடுக்க எத்தனித்தவளை சின்னவளின் அலறல் சத்தம் வாசலுக்கு ஓட வைத்தது.
வெளியே திண்ணையில் கண்கள் திறந்து வாய்பிளந்து மல்லாந்து சரிந்து சடலமாய்க்கிடந்தான் குமார். வார்னீஷ் கலந்த பெயிண்ட் டப்பா அவன் கையிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது.வாயில் இரத்தமும் பெயிண்டும் கலந்து வழிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற வசந்தியின் ''ஐயோ.. எஞ்சாமீ....'' என்ற அலறல் அந்தக்குடிசையிலிருந்து வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது எரிமலையாய்..


21 

Share


Written by
முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad