Bluepadஉடைபட்டது காந்தி சிலை அல்ல;
Bluepad

உடைபட்டது காந்தி சிலை அல்ல; காந்தீயம்

T
T.N.Radhakrishnan
10th Jun, 2020

Share

உடைபட்டது காந்தி சிலை அல்ல; காந்தீயம்!
----------------------------------------------------------
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை அமெரிக்க போலீசார் - கால்களால் கழுத்தை மிதித்துக் கொன்றிருக்கிறார்கள்.

இந்த விஷயம் பரவியவுடன் அமெரிக்காவே அதிரும் அளவிற்கு ஒவ்வொரு மாகாணத்திலும் வன்முறை தாண்டவம் ஆடியது.

போராட்டக் காரர்கள் ஊடாக உள்புகுந்த நைஜீரிய அகதிகள் அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தீவிர வன்முறைகளை நிகழ்த்தி கண்ணில் பட்டதையெல்லாம் சூறையாடி வருகிறார்கள்.

வாஷிங்டன் நகரில் இந்தியத் தூதரக வளாகத்தில் இருந்த நமது காந்தி சிலையும் கூட சில விஷமிகளால் உடைக்கப் பட்டது. அமெரிக்காவிலேயே இதற்கு மாபெரும் எதிர்ப்பு எழுந்தது.

ஏனெனில், காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோது அங்கிருந்த கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். அதனால்தான் நெல்சன் மண்டேலா காந்தியையே தனது முன்மாதிரித் தலைவராகக் கொண்டு - தனது போராட்டத்தைத் தொடங்கி வெற்றி கண்டார்.

அந்த கருப்பின மக்களுக்காகப் போராடிய கண்ணியத் தலைவனின் சிலையைத்தான் அதே கருப்பினத்தவர் உடைத்து நொறுக்கி உள்ளார்கள் என்பதால், அமெரிக்காவின் அனைத்து இன மக்களும் இந்த அக்கிரமத்துக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில்? மூச்! ஒரு எதிர்ப்பு சத்தத்தையும் காணோமே! ஆம் மக்களே - உடைபட்டது பெரியார் சிலையாகவோ, அம்பேத்கர் சிலையாகவோ அல்லது அண்ணா சிலையாகவோ இருந்திருக்குமானால் - இந்தியாவின் எல்லாக் கட்சிகளும் இடுப்பு வேஷ்டியை இறுக்கிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்குமே!

தூளாக்கப் பட்டது ஒரு தூயவனின் சிலைதானே -
அடித்து வீழ்த்தப் பட்டது ஒரு அரைவேட்டிக் காரனின் அன்பு வடிவம்தானே! -
உடைத்து நொறுக்கப்பட்டது ஒரு பதவியியையும் காணாத ஒட்டாண்டி உருவம்தானே!

அதனால்தானே இந்த அலட்சிய மௌனம்? அதனால்தானே இந்த அநாவசிய மௌனம்?

இது ஏதோ அமெரிக்காவில் நடந்திருக்கிறது - அதனால் நம் அரசியல்வாதிகள் அமைதி காக்கிறார்கள் - என்று யாராவது நினைத்தீர்களானால் அதைத் தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்தியாவில் உடைக்கப்பட்ட காந்தி சிலைகளைப் பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் செய்திகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டதா?

2018ல் ராஜஸ்தானில் உடைக்கப்பட்ட காந்தி சிலை பற்றி நீங்கள் அறிவீர்களா?

2019 செப்டம்பரில் உத்தரப் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட காந்தி சிலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா?

2020 ஜனவரியில் குஜராத்தில் உடைக்கப்பட்ட காந்தி சிலை பற்றி உங்களுக்கு குறுந்தகவலாவது வந்ததா?

இவை அனைத்தும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்னும் ஒற்றுமையையாவது நீங்கள் உணர்ந்தீர்களா?

இதில் வேடிக்கை என்னவென்றால், குஜராத்தில் உடைக்கப்பட்ட காந்தி சிலை - நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிஜியால் 2017ம் வருடம்தான் திறக்கப்பட்டது எனும் செய்தியாவது உங்கள் செவிகளில் விழுந்ததுண்டா?

ஊடகங்கள் அந்த அளவிற்கு - இம்மாதிரி செய்திகளை ஒளித்து வைப்பதற்கு என்ன காரணம்?

காந்தியின் செயல்பாடுகள் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ளவர்களே கூட - காந்தியைப் போற்றி மதித்தார்களே!

முதுபெரும் தலைவர் காந்தியோடு முற்றிலும் முரண்பட்ட தந்தை பெரியார் - "இந்தியாவிற்கு காந்தி நாடு என்று பெயரிடப்பட வேண்டும்" என்று காந்தியைத் தூக்கிப் பிடித்தவர்தானே!


காந்தியை கண்மூடித்தனமாக விமர்சித்த அறிஞர் அண்ணா - காந்தி இறந்தபோது துக்கம் தாளாமல் மூன்று நாட்கள் முழுப் பட்டினி இருந்தவர்தானே!

இவ்வளவு ஏன் - காந்தியின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட நேதாஜி அவர்கள்தானே அதே காந்தியடிகளை "தேசப்பிதா" என்று தேனொழுக அழைத்தவர்!

ஏனெனில், எதிர்ப்பவர்கள் அனைவருமே காந்தியின் தூய இதயத்தைத் துல்லியமாகப் புரிந்து கொண்டவர்கள்.

காந்தியைச் சுட்ட கோட்சே கூட, முதலில் காந்தியை நெஞ்சார வணங்கி விட்டுத்தானே கைத்துப்பாக்கியைத் தூக்கினான்? அதைப் பற்றி நீதிமன்றத்தில் கேட்டபோது "காந்தி செய்த சேவைகளுக்காக அவரை வணங்கினேன் - அவர் முஸ்லீம்களை ஆதரித்ததால் அவரைச் சுட்டேன்" என்றல்லவா காந்தியைப் பெருமைப் படுத்தினான்!

ஆக - இந்த எதிர்ப்பாளர்களுக்கு எதிரி காந்தி அல்ல; காந்தீயம்தான் அவர்களின் எதிரி.

காந்தீயம் என்பது மதங்களை முன்னிறுத்தி அரசியல் செய்ய அனுமதிக்காது - அதனால் அவர் மதவாதிகளிலால் மறுக்கப் பட்டார்.

காந்தீயம் - வன்முறையை வழிமொழியாது - அதனால் அவர் வன்முறையாளர்களால் வெறுக்கப் பட்டார்.

காந்தீயம் - ஊழலை ஒப்புக் கொள்ளாது - அதனால் ஊழல் பேர்வழிகளால் அவர் ஒதுக்கப் பட்டார்.

காந்தீயம் - சாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு சமாதி கட்டுவது - அதனால் சாதிவெறியர்களால் அவர் சாட்டப்பட்டார்.

காந்தீயம் - சுதேசி உற்பத்திக்கு சுப்ரபாதம் பாடுவது - அதனால் அவர் அந்நிய மோகிகளால் அவமதிக்கப் பட்டார்.

காந்தீயம் - கிராம முன்னேற்றத்தைக் கீழிருந்து மேலெழுப்புவது - அதனால் அவர் கார்ப்பரேட் கனவான்களால் கழுவி ஊற்றப்பட்டார்.

இன்றைக்கு சமூகத்தின் முக்கிய முகங்களாகக் காட்சியளிக்கும் அத்துணை பேரும் - மதவாத மந்திரவாதிகள், ஊழல் சாம்ராஜ்ய உற்சவ மூர்த்திகள், சாதியுணர்வில் சாதனையாளர்கள், அந்நிய வணிகத்தின் ஆருயிர் அடிமைகள், வன்முறையை மட்டுமே தன் முறையாகக் கொண்ட வாழும் பயங்கரவாதிகள், பயிர் விளையும் மண்ணில் படுபாதகத்தைச் செய்யும் பணக்கார கார்ப்பரேட்டுகள்.

இவர்கள் கைகளில்தான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அரசியலே அடக்கம்!

இவர்களின் அகண்ட தோள்களில்தான் அரசாங்க நிர்வாகம் அடக்கம் -

காலடிகளின் கீழேதான் காவல்துறை -

உதடுகளின் உச்சரிப்பில்தான் ஊடக செயல்பாடுகள் -

பின்னர் எப்படி காந்தியைக் குறித்த செய்திகள் உங்கள் காதுகளை அடையும்?

காங்கிரஸ் கனவான்களுக்குத் தெரிந்த காந்தியெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தாம். போர்பந்தர் காந்தி பற்றிப் புரியாத நபர்கள் அவர்கள்.

பிஜேபியினருக்கு காந்தி ஒரு கசப்புப் பொருள்.

எனவே - இடிக்கப் பட்டது காந்தி சிலை அல்ல; காந்தீயம் என்பதை அறிந்து பாரதமாதாவோடு சேர்ந்து நாமும் வருந்துவோம்.

ஜெய்ஹிந்த்!


13 

Share


T
Written by
T.N.Radhakrishnan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad